கலத்தில் இருந்து இறங்கியவுடன் லேசாக தலை சுற்றுவது போல இருந்தது. அதை சரி செய்து கொள்ளப் பயிற்சி இருந்தபடியால் சில விநாடிகளில் என்னை சரி செய்து கொண்டேன். கலத்தை மறைவில் விட்டுவிட்டு நடக்கத் துவங்கினேன். சற்று தூரம் நடந்ததும் ஒரு பெரிய மைதானம் போல் இருந்த இடத்திற்கு வந்தடைந்தேன். மைதானத்தைச் சுற்றி அங்காங்கே தென்னை ஓலைகள் கொண்டு நிழல் குடைகள் வடிவமைக்கப் பட்டு இருந்தன. அதன் அடியில் சிலர் எதையோ வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர். நானும் அங்கு சென்று நடப்பது என்ன என்று பார்க்கத் தொடங்கினேன். போர் கவசம் முற்றிலும் தரித்த ஒரு உருவம் தன் வாளைக் கச்சையில் இருந்து உருவி நின்றது. முகத்தை மூடிய படியால் அதன் முகத்தை சரியாகப் பார்க்க இயலவில்லையாயினும் ,அந்த உருவத்தைச் சுற்றி பலர் காயமுற்று வலியால் துடித்துக் கொண்டிருந்ததைப் பார்க்கும் பொழுது அவ்வுருவம் சாமானியன் அல்லன் என்றும், மாவீரன் என்றும் உறுதியாகச் சொல்ல இயலும். வேறொரு வீரன் அந்த உருவத்தை நோக்கி உயர்த்திய வாளோடு நகரத் தொடங்கியவுடன் அவ்வுருவம் அவன் அசைவைத் துல்லியமாக கணக்கிட்டு அவன் வாளைத் தடுத்தது. அதன் பின் நடந்த வாட் போரில் அவ் வீரனால் அந்த உருவத்தின் வாளுக்கு ஈடுகொடுக்க முடியாமல் மண்டியிட்டான். அதன் பின் தன் முகத்தை மறைத்திருந்த முகமூடியை அவ்வுருவம் அவிழ்த்தது.
கயல் விழிகள் இரண்டிலும் வீரமும் கர்வமும் மிளிர்ந்த பெண் ஒருத்தி அம்முகமூடிக்குள் இருந்து வெளி வந்தாள். ராஜ களைஅவள் முகத்தில் சுடர்விட்டு எரிய,
கையில் மரகதமும் கழுத்தில் பாண்டிநாட்டு முத்தும் செவிகளில் வைரமும் ஜொலித்தது. இத்தனை பேரை வீழ்த்தியது ஒரு பெண்ணா? என்ற மலைப்பில் அவளை நோக்கிக் கொண்டிருந்தேன். அவள் எழில் தோற்றம் கண்டு சில நொடிகள் பிரமிக்கவே செய்தாலும் அதில் இருந்து விடுபட்டு,அவளிடம் பேச முனைந்தேன். அப்பொழுது ஐந்து வீரர்கள் வந்து என்னைச் சுற்றி வளைத்தனர். பின் அவள் விரலால் அவர்களுக்கு ஏதோ சமிக்ஞை செய்ய அவர்கள் அனைவரும் பின் வாங்கினர்.
Comments
Post a Comment